வினை விதைத்தவன் வினை அறுப்பான்’
நவாக்ஷா மூல மந்திரம்‘ஓம் ஐம் ஹ்ரீம் க்லீம் சாமுண்டாயை விச்சே ஸ்வாஹா’
இதை முறையாக உபதேசம் வாங்கிய பின் ஜபம் செய்வதே நன்மையை விரைவாகப் பெற்றுத்தரும். அப்படியில்லாவிடினும் அருகிலுள்ள அம்பிகை சன்னிதியில் பூஜா கைங்கரியத்தில் ஈடுபட்டிருக்கும் சிவாச்சாரிய சுவாமிகளிடம் அதன் ஜபா முறை நியதிகளை வேண்டிக்கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.
முக்கியமாக ஆபிச்சாரப் பிரயோக முறைகளைச் செயலிழக்கச் செய்ய ஸ்ரீ மகா ப்ரத்யங்கிரா தேவி மாதாவை பிரியமுடன் வழிபட்டு வருவது மிகச் சிறந்ததாகும். வீட்டில் அவளது படத்தை நமது பிரச்சினைகள் தீரும்வரை வைத்து வழிபட்டு விட்டு பிறகு பூஜை சம்பந்தமான அனைத்துப் பொருட்களையும் ஒரு நதியிலோ, கடலிலோ சேர்த்து விட வேண்டும். வீட்டில் மிக சுத்தமான ஒரு இடத்தில் வடக்கு நோக்கியபடி படத்தை வைத்து தூப, தீப, நைவேத்தியங்கள் செய்து கீழ்கண்ட மந்திரங்களால் அவளைப் போற்றித் துதிக்க வேண்டும். நைவேத்தியமாக பானகம், உளுந்து வடை, சர்க்கரைப் பொங்கல் ஆகிய ஏதாவது ஒன்றைச் சமர்ப்பிக்கலாம்.
மந்திரம்
‘புத்தி முக்தி பலப்ரதாயை நம:
ஸகல ஐஸ்வர்ய தாரிண்யை நம:
நவக்ரஹ ரூபிண்யை நம:
ஒரு வளர்பிறை செவ்வாய், வெள்ளி, அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் ராகு காலங்களில் பூஜையை தொடங்கிச் செய்ய வேண்டும். அவ்வாறு ஏதாவதொரு நாளில் தொடங்கிவிட்டு, ஒவ்வொரு செவ்வாய், ஞாயிறு, வெள்ளி ஆகிய தினங்களில் வரும் ராகு காலங்களில் மேற்கூறிய மந்திரத்தை 48 அல்லது 108 முறைகள் உச்சாடணம் செய்த பின்பு பூஜையை நிறைவு செய்தல் வேண்டும். 48 முறையோ அல்லது 108 முறையோ பிரச்சினைக்குத் தக்கபடி செய்து வர வேண்டும். பாதிக்கப்பட்டவருக்காக வேறொருவர் கூட பூஜை செய்து பலனை அவர் பெறும்படியும் செய்யலாம். முறையாகச் செய்து வருவது மிக அவசியம். காரணம் அதர்வண பத்ரகாளியான அவளது தெய்வீக சான்னித்தியம் மிகவும் சக்தி வாய்ந்ததாகும். அந்த தெய்வீக அருள் யாவருக்கும் வாய்க்கட்டும்.
அன்னை ஸ்ரீ சாமுண்டேஸ்வரியை சரண் புகுந்து, வழிபட்டு நமது துயரங்களை நீக்கிக் கொள்வது இந்த முறையாகும். சாமுண்டேஸ்வரியை, அதற்குரிய ‘நவாக்ஷா’ மூலமந்திரம் கொண்டு ஜபம் செய்வதால் துன்பங்கள் விலகும். இந்த மந்திரத்தை ஒரு வளர்பிறை வெள்ளிக்கிழமையன்றோ, அல்லது வளர்பிறை செவ்வாய்க்கிழமைஅன்றோ ராகு காலத்தில் ஆரம்பித்துச் செய்ய வேண்டும். பிறகு தினமும் 108 முறை ஸ்படிக மாலை கொண்டு ஜபத்தை அந்தந்த நாளுக்குரிய ராகு காலங்களில் செய்து வர வேண்டும். அமர்வதற்கு ஒரு நல்ல மரத்தாலான ஆசனத்தைப் பயன்படுத்த வேண்டும். மஞ்சள் நிற ஆடையணிந்து கிழக்கு நோக்கி ஜபிப்பதே சிறந்ததாகும்.
இன்னொரு முறையானது ஸ்ரீ பைரவரின் வழிபாட்டு முறையாகும். நமக்கு உள்ளுணர்வில் ஏதோ முரண்பாடான உணர்வோ, தலை சுற்றலான உணர்வோ, அல்லது நமக்கு நடக்கும் விஷயங்களை நம்மாலேயே உணர முடியாமலிருப்பதோ, அல்லது காரணமற்ற ஒருவித பய உணர்வோ, நடுக்கமான உடல் செயல்பாடுகள் நமக்கு இருந்தாலோ (தகுந்த மருத்துவச் சிகிச்சைக்குப் பிறகும்) குடும்பத்தில் மிகச் சாதாரணமாக, அடிதடி விவகாரங்களால் ரத்தக் காயங்கள் உண்டாகிற நிலைமையோ இருக்கும் பட்சத்தில் கீழ்கண்ட ஸ்ரீ பைரவ வழிபாட்டை மேற்கொள்வதன் மூலமாக பல சிரமங்களைத் தவிர்த்து விடலாம்.
சனிக்கிழமைகளிலோ, பிரதோஷ தினங்களிலோ, ஞாயிற்றுக்கிழமை ராகு காலங்களிலோ அல்லது செவ்வாய்க்கிழமைகளிலோ, மிக முக்கியமாக தேய்பிறை அஷ்டமி தினத்தன்றோ ஸ்ரீபைரவரின் சன்னிதியில் வெண்பூசணியில் நல்லெண்ணெய் விட்டு பஞ்சுத் திரியால் விளக்கேற்ற வேண்டும். பைரவர் சன்னிதிக்குச் சென்றது முதல் வீடு திரும்பும்வரை யாரிடமும் பேசாமல், எதுவும் சாப்பிடாமல் இருக்க வேண்டும். வழக்கம்போல அசைவ உணவுப் பக்கமே செல்வது கூடாது. பைரவருக்குரிய மந்திரங்கள் வருமாறு:
‘ஓம் பைரவாய நமஹ’
‘ஓம் ப்ராம் பைரவாய நமஹ’
‘ஓம் நமோ ருத்ராய கபாலியாய
பைரவாய த்ரைலோக் நாதாய
ஓம் ஹ்ரீம் பட் ஸ்வாஹா’
இவை பைரவருக்கான பல மந்திரங்களில் மூன்று மட்டுமே. பைரவருக்குரிய கால நேரங்களில், நமக்குச் சரியென்று படும் மந்திரத்தை அந்தக் குறிப்பிட்ட நாளில் இருந்து, தினமும் பைரவர் சன்னிதியில் 48 முறை ஜபம் செய்து வந்தால், துன்பங்களுக்குத் துன்பம் தரும் தூய சக்தி பெற்றவர்களாவோம். முக்கியமாக சனிக்கிழமைகளில் மந்திர ஜபம் செய்து வந்தால் கை மேல் பலன் காணலாம்.
நமக்கு வரக்கூடிய துன்பங்களை உடனடியாகத் தீர்க்கக் கூடிய சக்தி படைத்தவற்றில் மகான்களின் ஜீவ சமாதிகளும் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. அத்தகைய ஜீவ சமாதிகளில் மகான்களின் உடல் நிலைகளை மட்டுமே சார்ந்திராத ‘ஜீவ காந்த சக்தியலைகளின் அதிர்வுகள்’ ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கும், ஒரு குறிப்பிட்ட கால வரையறைக்கு உட்பட்டும் தம்மை நாடி வருபவர்களுக்கு அருளாசியை வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றன.
அத்தகைய மகான்களின் சக்தியலைகள் பலம் பெறும் நாட்களான வியாழக்கிழமைகளிலோ, அல்லது அந்தக் குறிப்பிட்ட மகானின் ஜன்ம நட்சத்திர தினத்தன்றோ விரதமிருந்து, அங்கு தீபமேற்றி தரிசனம் செய்வதோடு, நமது பிரார்த்தனைகளையும் செலுத்தி வந்தால் நமது குறைகள் யாவும் நீங்கப் பெறும்.
அஷ்ட கர்மங்கள்
எல்லாவித தேவதா சக்திகளுக்கும் எட்டு விதமான சக்திநிலை வெளிப்பாடுகள் உள்ளன. அவை, அஷ்ட கர்மங்கள் (எண் தொழில்கள்) என்று வழங்கப்படுகின்றன. அவை:
* மோகனம் (ஒருவர் மீது நல்ல மதிப்பீடுகளை ஏற்படுத்துவது)
* வசியம் (ஒருவரது விருப்பப்படி இன்னொருவர் செயல்படுதல்)
* ஸ்தம்பனம் (ஒரு குறிப்பிட்ட செயல்பாட்டை நிறுத்தி விடுதல்)
* ஆகர்ஷணம் (ஒரு பொருளையோ அல்லது ஆளையோ வரவழைத்தல்)
* உச்சாடணம் (ஒரு இடத்திலிருந்தோ அல்லது ஒரு ஆளிடமிருந்தோ ஒரு குறிப்பிட்ட விஷயத்தை வெளியேறச் செய்தல்)
* பேதனம் (ஒருவரது மனநிலைகளில் குழப்பத்தை ஏற்படுத்துவது)
* வித்வேடனம் (ஒருவரின் மனநிலைகளில் கடும் பிரிவுணர்ச்சியை உண்டாக்கி அவரைப் பிறரிடமிருந்து பிரித்து விடுதல்)
* மாரணம் (ஒருவருக்கு மரணத்தையோ அல்லது அதற்குச் சமமான நிலைகளையோ உண்டாக்குவது)