உடலைப்பற்றி கூறுவேன் தேகமது என்னவென்றால் குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி மாறுபடா எலும்புக்குத்

உடலைப்பற்றி கூறுவேன் தேகமது என்னவென்றால் குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி மாறுபடா எலும்புக்குத்
உடலைப்பற்றி கூறுவேன் தேகமது என்னவென்றால் குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி மாறுபடா எலும்புக்குத் துவாரமிட்டு வன்மையுடன் நரம்பினால் வலித்துக்கட்டி தேறுதலாய் இரத்தமதை உள்ளே ஊற்றி தேற்றமுடன் அதன்மேலே தோலைமூடி ஆறுதலாய் வாய்வுதனை உள்ளடக்கி அப்பனே தேகமென்ற கூறுண்டாச்சே.

Friday, 21 February 2014

மந்திரம் யந்திரம்


கொஞ்சம் அமானுஷ்யமாய் தோன்றினாலும், இந்த மாதிரி தலைப்புகளில் 'ஞானவெட்டியான்' போன்ற பெரியவர்கள் இது தொடர்பாக எழுதியிருந்தாலும் இந்தளவுக்கு பாமரத்தனமாய் பதியவில்லை என நினைக்கிறேன்.நான் அறிந்த மற்றும் உணர்ந்தவைகளை என் கோணத்தில் பகிர்ந்துகொள்ள இந்தப் பதிவு.

முழுமையான நிறைவான த்யானம்தான் வாழ்வின் உயரிய இன்பங்களை வழங்கும் என நமது சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. சரி த்யானத்தின் பொருளை ஆராய்ந்தால் ஆச்சர்யகரமாய் "த்யான நிர்விஷ்யம் மனஹ" என்கிறார்கள், அதாவது எதுவுமற்ற வெறுமையான மனநிலையும் அதையொட்டிய எண்ணங்களும்.(குமரன் சரியான ட்ரான்ஸ்லேஷன் ப்ளீஸ்!)

சரி...தியானத்தை அறியாதவர்கள் Material world எனப்படும் வாழ்வியல் இன்பங்களை எப்படி அடைவதாம்? சாமானியர்களும் தங்கள் ஆசைகளையும், இலக்குகளையும் அடைவதற்காகவே பண்டைய மகரிஷிகள் வழங்கிய "சாதனா" எனப்படும் "யந்திர,தந்திர,மந்திர" சாஸ்த்திரங்கள். இவை பற்றிய குறிப்புகள் இந்து சாஸ்திரங்களில் மட்டுமல்லாது பௌத்த, சமண, இஸ்லாமிய, கிருத்துவ மத நூல்களிலும் காணக்கிடைப்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவில் இவை மனிதகுல மேம்பாட்டிற்காக மட்டுமே உபயோகப்படுத்தவேண்டும் என்பதை அனைத்து மதங்களும் உறுதியாக உணர்த்தியிருக்கின்றனர்.

இந்து மதத்தில் மந்திரம், தந்திரம், யந்திரம் ஆகிய மூன்றும்,மூன்று மார்கங்களாய்(பாதை) சொல்லப்படுகிறது.மந்திரம் என்பது ஞான மார்கமாகவும் , தந்திரம் பக்தி மார்கமாகவும், யந்திரம் கர்மசந்யாச மார்கமாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.இந்த மூன்றும் ஏதோ ஒருவகையில் சம்பந்தப்படாமல் எந்த ஒரு வழிபாடும் நிறைவாகாது என்றும் சொல்லப்படுகிறது.


இப்பகுதியில் மந்திரம் தொடர்பாய் பார்ப்போம்....

இந்து மதத்தில் இறைவன் "வேதமந்த்ர சொரூப நமோ நமோ" என துதிக்கப்படுகிறார்.மந்திரங்களைப் பற்றிய குறிப்புகள் வேதங்களில் விரவிக்கிடந்தாலும் இப் பதிவில் தமிழ் கூறும் நல்லுலகில் மந்திரம் எவ்வாறு கையாளப்பட்டது என்பதையே முதன்மையாக வைத்து எழுத விரும்புகிறேன்.ஏனெனில், இன்றுள்ள சூழலில் மந்திரங்கள் சொல்பவருக்கும் இறைவனுக்கும் மட்டுமே புரிய நாம் தேமேவென பேந்த பேந்த விழித்துக் கொண்டிருபதுதான் நிதர்சனம்.

தென்னாடுடைய சிவனே போற்றி!
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!

என்று சமத்துவத்தைச் சொன்ன தமிழில் மந்திரங்கள் மறைபொருளாக இருந்திருக்க வாய்ப்பில்லை, காலப்போக்கில் அவை மறைக்கப்பட்டதாகவே கருதலாம்."ஊனுடம் பாலயம் உள்ளம் பெருங்கோவில்" என இறைவனை தங்கள் உடலில் கண்ட் சித்தர்கள் கூட இம்மந்திர உச்சாடனங்களை தங்கள் பாடல்களில் விளக்கியுள்ளனர்.

மேலும் விவாதிப்பதற்கு முன், மந்திரமொழி பற்றியும் அதன் அடிப்படைகளையும் தெரிந்து கொள்வோம்.ஒரு எழுத்து உருவாக்கும் ஒலியானது நமது உடலின் எந்த இடங்களின் முய்ற்சியால் உருவாகிறது என்பதை இதுவரை யாராவது கவனித்திருக்கிறீர்களா?, கொஞ்சம் முயற்சித்துப் பாருங்கள் ஆச்சரியமான விடயங்களை உணரமுடியும்.

ஆனால் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நமது முன்னோர்கள் இந்த ஒலிமூலங்கள் நமது உடலில் எங்கு மையம் கொண்டுள்ளது என உணர்ந்து அதை தூண்டும் வகையிலான ஒலிக் குறிப்புகளை உருவாக்கியிருந்தனர்.இந்த சொற்களுக்கு அர்த்தங்கள் ஏதுமில்லை. இவற்றை 'பீஜங்கள்'என்றும், உடலில் ஒலி தோண்றும் இடங்களை 'தானங்கள்' என்றும் கூறுகிறார்கள்

மந்திரங்களின் பொருள் எனப்பார்த்தால், மொழிப்பொருள் மற்றும் ஒலிப்பொருள் என இருவகையாக கொள்ளலாம்.ஒலிப்பொருள்தான் நுட்பமானது. மந்திரங்களை உச்சரிக்கும் முறையை மூன்று வகையாக முறையே, வாயினால் சப்தமாய் உச்சரிப்பதை'வைகரி'என்றும், உதட்டால் உச்சரிப்பதை 'உபான்ஸு' என்றும் மனதால் உச்சரிப்பதை 'மானசீகம்' என்றும் சொல்கிறார்கள்.இதில் மானசீக முறையே அதிக பலனைத் தருமென்ற கருத்தும் உள்ளது.

மானசீகமாய் உச்சரிக்கும்போது மந்திரங்கள், உள்மனதில் ஊடுருவி, உடலெங்கும் பரவி பின் உடலைத்தாண்டி பிரபஞ்சத்தில் அதிர்வுகளை உருவாக்கி உள்மனத்தையும் பிரபஞ்சத்தையும் இனைக்கும் அனுபவத்தை சொல்லித் தெரிவதைவிட உணர்வதே சிறப்பாயிருக்கும். இம்மந்திர அதிர்வுகள் நொடிக்கும் நாலு லட்சம் கிலோமீட்டர் வேகத்தில் பரவுவதாயும் ஒரு குறிப்பு காணக்கிடைக்கிறது.

'தேவபாஷை' எனக் கூறப்படும் சமஸ்கிருதத்தில் சொல்லப்படும் மந்திரங்களுக்குத்தான் வலிமை உண்டு எனக்கூறப்படுவதை மறைமலையடிகள் தனது 'சிவஞானபோத ஆராய்ச்சி' என்கிற நூலில்(பக்கம் 112) தக்க ஆதாரங்களுடன் நிராகரித்திருக்கிறார். மந்திரம் என்பது தமிழ்வார்த்தை என்பதை பலர் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால் தொல்காப்பியம் முதல் பழந் தமிழ் நூல்களில் இந்த வார்த்தை கையாளப்பட்டிருக்கிறது.மந்திரத்தை மனதின் திறம் என பொருள் கொள்ளலாம்.மனதை உறுதி செய்ய மந்திரம் பயனாகிறது என்பதுதான் மந்திரத்தின் ஆகக்கூடிய பலன் என நான் கருதுகிறேன்.

நமது உடலானது பல நாடிகளால் ஆனதாக சித்தர்கள் குறிப்பிடுகின்றனர்.நாடிகளை வசப்படுத்தினால் எதுவும் சாத்தியமாகுமாம்.சப்த சலனமாய் உச்சரிக்கும் மந்திர ஒலிகள் இந்த நாடிகளைத் தூண்டி உச்சரிப்பவர் மற்றும் கேட்பவரிடம் சலனத்தை உண்டாக்கும் என்கிறார்கள்.மந்திரங்களை உச்சரிக்கும்போது அந்தந்த பீஜங்களுக்கான உடல் உறுப்பின்மீது சித்தத்தை நிறுத்தி தொடர்ந்து கூற அந்த மந்திரங்களுக்கான பலனை பெறலாமாம்.மாறாக 'பதஞ்சலி யோக சூத்திரம்'என்கிற நூலில் மந்திரத்தின் பொருள் தெரியாமல் எத்தனை முறை உச்சரித்தாலும் பயனில்லை என கூறுகிறது.


மந்திரங்களை தொடர்ந்து உச்சரிப்பதை 'உருவேற்றுதல்' என்பர்.மந்திர சொற்களை குறிப்பிட்ட எண்ணிக்கையில் உருவேற்றினால் உள்ளம் உறுதி பெற்று தான் சொல்வதும் செய்வதும் சாத்தியமாகும் என்கிற நம்பிக்கை தோன்றுகிறது.இந்த நம்பிக்கையே வாழ்வியல் சவால்களை எதிர்கொள்ள உதவுகிறது.

இந்த பீஜங்கள் மற்றும் தானங்களை ஒரு சரியான குருவே உணர்த்தமுடியும்.சித்தர் மரபில் குருவின் மகத்துவம் உயர்வாக கூறப்படுகிறது. திருமூலர் கூட சிவனை வழிபடுவதால் பயனில்லை, சிவனை காட்டும் குருவை வழிபட்டாலே போதுமென கூறுகிறார்.'வெளியே உள்ள குரு நமக்கு உள்ளே உறையும் குருவை காட்டுகிறான்" என்பது சித்தர்களின் தத்துவம்.

தமிழகத்தை பொறுத்த வரையில் 'ஓம்' என்கிற ஓரெழுத்து மந்திரமும். 'சிவாயநம' என்கிற ஐந்தெழுத்து மந்திரமும், 'சரவணபவ' என்கிற ஆறெழுத்து மந்திரமும், வைணவத்தில் 'ஓம் நமோ நாராயணய' என்கிற எட்டெழுத்து மந்திரம்தான் அனைவரும் அறிந்தது.இதைத் தாண்டி எண்ணற்ற மந்திர உச்சாடணங்கள் உள்ளது.

இந்தத் தொடரின் ஆரம்பத்திலேயே சொல்ல வேண்டுமென நிணைத்தேன்,எவ்வித சமயச் சார்பு இல்லாது ஒரு சாமானியனின் பார்வையிலேயே தொடர்கிறேன்.இவையெல்லாம் சாத்தியமா/புளுகா என ஆராய்வது இப்பதிவின் நோக்கமல்ல...பதிவெழுத உதவிய நூல்களின் பட்டியலை இத்தொடரின் இறுதியில் தருகிறேன்.

இனி இந்தப் பதிவினில் ஒலி சார்ந்த மந்திரங்கள் சிலவற்றை தருகிறேன்.இவற்றை நான் பரிட்சித்துப் பார்த்ததில்லை,பார்க்கும் பொருமையும் இல்லை.படிக்கும் அன்பர்கள் யாருக்கேனும் இதனால் பயனேதும் விளையும் பட்சத்தில் அதுவே எனக்கு பெரிய மகிழ்ச்சியாயிருக்கும்.தமிழில் மந்திரங்கள் பெரும்பாலும் சிவன்,சக்தி,சும்ரமணியர்,விஷ்னு இவர்களைச் சார்ந்ததாகவே காணக்கிடைக்கிறது.

இங்கே சிவனைச் சாந்த மந்திரங்களை பார்ப்போம்.சிவனுக்கு ஐந்து முகங்கள் அவையாவன,நான்கு திசைகளுக்கொரு முகம்,ஐந்தாவது முகம் ஆகாயத்தை நோக்கியது.கிழக்கில்'தத்புருஷம்',தெற்கில்'அகோரம்', வடக்கில் 'வாமதேவம்',
மேற்கில்'சித்தியோசம்', உச்சியில்'ஈசானம்'.கருவூரார் எனப்படும் கருவூர் சித்தர் இந்த ஒவ்வொரு முகத்திற்குமான பல மந்திரங்களை அருளியுள்ளார்.

பொதுவில் மந்திரங்களை கைளாளும் முறையாவது, அமைதியான காற்றோட்டமுள்ள இடம் அல்லது கோவில் போன்ற இடங்களில் அமர்ந்து மனதை வெறுமையாக்கி, முதலில் தங்கள் குலதெய்வத்தினை வணங்கி, பின் பெற்றோரையும், குருவினையும் மனதால் துதித்து மூலமந்திரத்தை மனதில் உச்சரிக்க வேண்டும்.முதலில் குறைந்தது 108 அல்லது 1008 முறை விடாது உச்சரித்தல் அவசியம்.

அதன் பின் நேரம் கிடைக்கும் போதெல்லாம் மனதினை ஒரு நிலைப்படுத்தி மந்திரங்களை உச்சரிக்கலாமென்கிறார்கள். எண்ணிக்கை கணக்கிற்காக ஜெப மாலைகளை உயயோகிக்கலாம்.இவ்வாறு தொடர்து உச்சரிக்கும் போது அந்த மந்திரங்கள் நமக்கு சித்திக்கின்றன என்கிறார்கள்.பின் எப்போது தேவையேற்படுகிறதோ அச்சமயத்தில் தேவையான மந்திரங்களை 9 அல்லது 21 தடவை உச்சரிக்க மந்திரம் பலிக்குமாம். இனி மந்திரங்கள்....



தத்புருஷ மந்திரம்
இதன் மூல மந்திரம் 'நமசிவாய' இதை விடாது உச்சரிக்க உச்சாடணம் ஏற்படும். தத்புருஷத்தில் கருவூரார் 25 மந்திரங்களைச் சொல்கிறார், பதிவின் நீளம் கருதி ஐந்தினை தருகிறேன்.


"நமசிவாயம் லங்க நமசிவாய" என உச்சரிக்க மழை பெய்யுமென்கிறார்.
"அலங்கே நமசிவாய நமோ" என உச்சரிக்க புகழ் உண்டாகுமாம்.
"அங் சிவாய நம" என உச்சரிக்க குழந்தைப் பேறு உண்டாகுமாம்.
"ஊங்கிறியும் நமசிவாய நமா" என உச்சரிக்க மோட்சம் கிட்டுமாம்.
"ஓம் நமசிவாய" என உச்சரித்தால் காலனை வெல்லலாம்.


அகோர மந்திரம்
இதன் மூல மந்திரம் "நமசிவ",


"சங் கங் சிவாயநமா" என உச்சரிக்க ஜீவனில் சிவத்தைக் காணலாம்.
"மங் மங் மங்" என உச்சரித்தால் உணவை வெறுத்து பசியை துறக்கலாம்.
"வசாலல சால்ல சிவாய நமா" என உச்சரித்தால் மழையில் நனையாமல் செல்லலாம்.
"சரனையச் சிவாய நம" என உச்சரிக்க வானில் பறக்கலாமாம்.
"கேங் கேங் ஓம் நமசிவாயம்" என உச்சரிக்க எல்லோரும் வசியமாவர்.
"ஓங் சருவ நம சிவாய" என உச்சரிக்க மழை உண்டாகும்



வாமதேவ மந்திரம்


"கங்கங்ணங் நிஷர் சிவிங்கம்" என உச்சரித்தால் காமதேவன் அருள் கிட்டுமாம்.
"வங் வங் சிங் சிவாய நம"என உச்சரிக்க உலகின் எப்பாகத்திற்கும் வழி தெரியுமாம்.
"சதா சிவாய நம" என உச்சரிக்க நான்கு வேதத்தின் பொருள் அறியலாம்.
"ஓம் அங்கிஷ ஊங் சிவாயநம" என உச்சரிக்க நினைத்த இடத்தில் மனதினை விரைவாக செய்யலாம்.


சத்யோசாத மந்திரங்கள்



"சிவாய ஓம்" என உச்சரிக்க திருமாலில் ஆற்றல் கிட்டும்.
"ஓங் உங் சிவாய ஓம்" என உச்சரிக்க குண்டலினியின் சக்தியை காணலாம்.
"கிருட்டிணன் ஓம் சிவாய நம" என உச்சரிக்க இராவணன் மலையைப் பெயர்த்த பலம் கிட்டும்


ஈசான மந்திரங்கள்


"சிமிறியும் ஊங்சிவாய ஊங் அங் நம ஓ" என உச்சரிக்க சிவதத்துவத்தை காணலாம்.
"மங் நங் சிவ சிவாய ஓம்" என உச்சரிக்க நந்தியின் தத்துவத்தை உணரலாம்.
"வங் யங் சிங் ஓம் சிவாய" என உச்சரிக்க எதிரியின் உடல் தனலாகும்.
"சிங் சிங் சிவாய ஓ" என உச்சரிக்க முக்காலத்தையும் உணரலாம்.
"மய நசிவ சுவாக" உச்சரிக்க ஆகாயத்தில் பறந்து செல்லும் சித்தர்களின் ஆசி கிட்டும்