உடலைப்பற்றி கூறுவேன் தேகமது என்னவென்றால் குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி மாறுபடா எலும்புக்குத்

உடலைப்பற்றி கூறுவேன் தேகமது என்னவென்றால் குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி மாறுபடா எலும்புக்குத்
உடலைப்பற்றி கூறுவேன் தேகமது என்னவென்றால் குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி மாறுபடா எலும்புக்குத் துவாரமிட்டு வன்மையுடன் நரம்பினால் வலித்துக்கட்டி தேறுதலாய் இரத்தமதை உள்ளே ஊற்றி தேற்றமுடன் அதன்மேலே தோலைமூடி ஆறுதலாய் வாய்வுதனை உள்ளடக்கி அப்பனே தேகமென்ற கூறுண்டாச்சே.

Thursday, 20 February 2014

பாவங்களை தீர்க்காமல் தியானத்தில் எவனும் வெற்றி பெற முடியாது



 புண்ணியம் மட்டும் தான் பாவத்தை போக்கும் என்பதை உறுதியாக நம்ப வேண்டும்
 
                       
பிறப்பால் ஏற்பட்ட பாவங்களை தீர்க்காமல் தியானத்தில் எவனும் வெற்றி பெற முடியாது ஆகாசத்தில் பறக்க வேண்டுமென்றால் சிறகு வேண்டும் இல்லம் எங்கும் மலர்வாசம் வீசவேண்டுமானால் பூஞ்சோலைக்குள் வீடு கட்ட வேண்டும் தியானத்தில் அமர்ந்தவுடன் மனமானது குவிய வேண்டுமென்றால் நம்மை சூழ்ந்துள்ள இருவகை பாவங்களும் அழிய வேண்டும் பாவத்தை அழிக்க முயற்சிக்காமல் அழுவது அறியாமையாகும் எனவே நல்லதை மட்டுமே செய் நல்லதை மட்டுமே நினை நல்லது மட்டுமே நடக்கும் நாராயணன் துணை வருவான் பிறவி பெருக்கடலை நீ கடப்பாய்.

 
போன ஜென்மத்தில் என்ன செய்தேன் எப்படிபட்டவனாக வாழ்ந்தேன் என்பது எனக்கு தெரியாது நான் செய்தது எல்லாம் பாவமாகவே இருக்கட்டும் அதற்கான தண்டனையாக இந்த வாழ்க்கை அமையட்டும் ஆனால் நான் கேட்பதெல்லாம் ஒன்று தான் அந்த பாவ சுமை என்னில் இருந்து நீங்க அல்லது அதன் கனம் குறைய நான் செய்ய வேண்டியது என்ன? என்பது தான் என்று பலர் ஏங்கி தவிக்கிறார்கள் உண்மையில் நமது பாவங்கள் தொலைவதற்காகவே மறு ஜென்மம் என்ற ஒன்றை கருணை கடலான கார்முகில் வண்ணன் நமக்கு தந்திருக்கிறான் ஆனால் இந்த பிறப்பு சென்ற பிறப்பின் பாவத்தை தொலைப்பதற்காக நாம் பெற்றிருக்கும் வரம் என்பதை நம்மில் எத்தனை பேர் உணர்ந்திருக்கிறோம் உணர்ந்தவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்
 
 
 
               பலவகையான தவறுகளையும் பாவங்களையும் ஜென்மஜென்மாவாக செய்து கொண்டே வருகிறோம் கடலின் தண்ணீர் எப்படி இடையீடு இல்லாமல் நிறைந்திருக்கிறதோ அதை போலவே நமது பாவங்களும் நிறைந்திருக்கிறது உடம்பில் ஒட்டிய சகதி விலகாமல் உடல் சுத்தம் ஏற்படுமா? நாம் செய்த பாவ வினைகளின் பலனை அனுபவிக்காமல் ஆத்மானுபவம் என்னும் பேரானந்த நிலை நமக்கு கிடைக்குமா? கிடைக்கும் என்று எதிர்பார்ப்பது நியாயமாகுமா? அறிவுக்கு பொருந்தியும் வருமா? கண்களில் விழுந்த துசியை எடுக்கும் வரை கண்ணெரிச்சல் போகாது என்பது போல பண்ணிய பாவத்தின் பலனை அனுபவிக்காமல் மனம் ஒருநிலைப்பட்டு வராது வரவும் முடியாது
 
 
                நேற்று உடம்பில் ஒட்டிய சேற்றை கழுவி சுத்தப்படுத்துவதற்கு பதிலாக மீண்டும் இன்று புதிய சேற்றை எடுத்து உடல் முழுவதும் பூசிக்கொள்கிறோம் அதாவது பழைய பாவமூட்டையை இன்னும் பெரியதாக ஆக்கிக் கொள்ள புதிய பாவங்களை செய்து கொண்டே போகிறோம் ராணி எறும்புக்கு பின்னால் அடிமை எறும்புகள் அணிவகுத்து வருவது போல் பழைய புதிய பாவங்களின் வரிசையானது நம் பின்னால் தொடர்ந்து கொண்டே இருக்கிறது இரண்டு கைகளிலும் தூக்க முடியாத சுமைகளை தூக்கி கொண்டு தோள்பட்டை வலியெடுக்கிறது என்று சொல்வதை போல இத்தனை பாவத்தை நமக்குள் வைத்து கொண்டு மனம் குவியவில்லையே என அழுது புலம்புவது எப்படி சரியாகும்?
 
 
                   
இருட்டை போக்க வேண்டுமென்றால் அதை வாரி வாரி வெளியில் கொட்டினாலும் அது போகவே போகாது ஒரு சிறிய தீபத்தை ஏற்றி வைத்தாலே இருட்டு பின்னங்கால் பிடரியில் பட ஓடிவிடும் அதே போலவே நமது பாவ சுமைகள் குறைவதற்கு புண்ணிய காரியங்கள் செய்ய வேண்டும் தண்ணீர் மட்டும் தான் தாகத்தை தீர்க்கும் நெருப்பு மட்டும் தான் சுடும் புண்ணியம் மட்டும் தான் பாவத்தை போக்கும் என்பதை உறுதியாக நம்ப வேண்டும்


நான் தான் தினசரி நிறைய புண்ணிய காரியங்கள் செய்கிறேனே சாலையை கடந்து போக சிரமப்படும் வயோதிகர்களையும் பார்வையற்றோர்களையும் வழிகாட்டி நடத்தி வைக்கிறேன் படிக்க வசதி இல்லாத சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு பாடபுத்தகங்கள் வாங்கி தருகிறேன் பள்ளிக்கூட கட்டணத்தையும் கட்டுகிறேன் எனக்கு தெரிந்து யாரும் பசியோடு இருக்க கூடாது என்பதற்காக அன்னதானமும் செய்கிறேன் தெருவோரத்தில் வீடுகள் இல்லாத வறியவர்களுக்கு குளிர்காலத்தில் போர்த்திக் கொள்ள போர்வையும் கொடுக்கிறேன் இப்படி எத்தனையோ நல்ல காரியங்களை வெளியில் தெரிந்தும் தெரியாமலும் செய்து வருகிறேன் ஆனாலும் என் மனது ஒருநிலைப்பட வில்லையே என் பாவங்கள் எப்போது தொலைவது நான் எப்போது பேரின்ப நிலையை எட்டிபிடிப்பது என்று சிலர் புலம்புவது நம் காதில் விழுகிறது
 
 
                 சாஸ்திரங்கள் சொல்லுகிறப்படி பாவங்கள் இரண்டு வகைப்படுகிறது ஒன்று சரீரத்தால் செய்கின்ற பாவம் மற்றொன்று மனத்தால் செய்கின்ற பாவம் உடம்பால் செய்கிற பாவத்திற்கு உடம்பாலும் மனத்தால் செய்கிற பாவத்திற்கு மனதாலும் பிராயச்சித்தம் செய்ய வேண்டும் தானங்கள் நன்கொடைகள் யாகங்கள் பூஜைகள் என்பதெல்லாம் உடம்பால் செய்கின்ற பாவத்தின் பரிகாரமே ஆகும்

நெஞ்சம் நிறைய வஞ்சகத்தை வைத்துக் கொண்டு நான் வருடம் தோறும் சபரிமலை போகிறேனே மாதம் தோறும் திருப்பதி செல்கிறேனே தினம் தோறும் பெருமாளை சேவிக்கிறேனே என்பதால் எந்தபயனும் இல்லை நமது சனாதன தர்மத்தில் சொல்லப்படுகின்ற வேத நெறிப்படியான வாழ்க்கை முறையை வாழ பழக வேண்டும் அதாவது சொந்த லாபத்திற்காக காரியங்களை செய்வதை விட்டு விட்டு பொது நன்மைக்கான காரியங்களை செய்வது தான் வேத வழிப்பட்ட வாழ்க்கையாகும் இந்த வாழ்க்கை முறை நமது மனதிற்குள் ஆழமாக பதிந்துள்ள துவேசம் துக்கம் பயம் முதலிய கெட்ட சைத்தான்களை அடியோடு வேரறுத்து விடும்