உடலைப்பற்றி கூறுவேன் தேகமது என்னவென்றால் குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி மாறுபடா எலும்புக்குத்

உடலைப்பற்றி கூறுவேன் தேகமது என்னவென்றால் குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி மாறுபடா எலும்புக்குத்
உடலைப்பற்றி கூறுவேன் தேகமது என்னவென்றால் குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி மாறுபடா எலும்புக்குத் துவாரமிட்டு வன்மையுடன் நரம்பினால் வலித்துக்கட்டி தேறுதலாய் இரத்தமதை உள்ளே ஊற்றி தேற்றமுடன் அதன்மேலே தோலைமூடி ஆறுதலாய் வாய்வுதனை உள்ளடக்கி அப்பனே தேகமென்ற கூறுண்டாச்சே.
Showing posts with label விஷ்ணு. Show all posts
Showing posts with label விஷ்ணு. Show all posts

Wednesday, 9 April 2014

பூஜையின் துவக்கத்திலும் பூஜையின் போதும் கூடாதவை


 விநாயகரை துளசியால் அர்ச்சனை  செய்யக் கூடாது.

பரமசிவனுக்குத் தாழம்பூ உதவாது. தும்பை, வில்வம், கொன்றை முதலியன விசேஷம். ஊமத்தை, வெள்ளெருக்கு ஆகியவற்றாலும் அர்ச்சிக்கலாம்.

விஷ்ணுவை அக்ஷதையால் அர்ச்சிக்கக் கூடாது.

பவளமல்லியால் சரஸ்வதியை அர்ச்சனை செய்யக் கூடாது.
விஷ்ணு சம்பந்தமான தெய்வங்களுக்கு மட்டுமே துளசி தளத்தால் அர்ச்சனை செய்யலாம். அதுபோல, சிவசம்பந்தமுடைய தெய்வங்களுக்கே வில்வார்ச்சனை செய்யலாம்.

துலுக்க சாமந்திப்பூவைக் கண்டிப்பாக உபயோகப்படுத்தக் கூடாது.

மலரை முழுவதுமாக அர்ச்சனை செய்ய வேண்டும். இதழ் இதழாகக் கிள்ளி அர்ச்சனை செய்யலாகாது.

வாடிப்போன, அழுகிப்போன, பூச்சிகள் கடித்த மலர்களை உபயோகிக்கக் கூடாது.

அன்று மலர்ந்த மலர்களை அன்றைக்கே உபயோகப்படுத்த வேண்டும்.
ஒரு முறை இறைவன் திருவடிகளில் சமர்ப்பிக்கப்பட்ட மலர்களில் எடுத்து, மீண்டும் அர்ச்சனை செய்யக் கூடாது. வில்வம், துளசி ஆகியவற்றை மட்டுமே மறுபடி உபயோகிக்கலாம்.

தாமரை, நீலோத்பலம் போன்ற நீரில் தோன்றும் மலர்களை தடாகத்திலிருந்து எடுத்த அன்றைக்கே உபயோகப்படுத்த வேண்டும் என்கிற விதியில்லை.

வாசனை இல்லாதது, முடி, புழு ஆகியவற்றோடு சேர்ந்திருந்தது, வாடியது, தகாதவர்களால் தொடப்பட்டது, நுகரப்பட்டது, ஈரத்துணி உடுத்திக் கொண்டு கொண்டு வரப்பட்டது, காய்ந்தது, பழையது, தரையில் விழுந்தது ஆகிய மலர்களை அர்ச்சனைக்கு உபயோகப் படுத்தக்கூடாது.
செம்பக மொட்டுத் தவிர, வேறு மலர்களின் மொட்டுகள் பூஜைக்கு உகந்தவை அல்ல.


மலர்களைக் கிள்ளி பூஜிக்கக் கூடாது. வில்வம், துளசியைத் தளமாகவே அர்ச்சிக்க வேண்டும்.

முல்லை, கிளுவை, நொச்சி, வில்வம், விளா-இவை பஞ்ச வில்வம் எனப்படும். இவை சிவபூஜைக்கு உரியவை.
துளசி, முகிழ்(மகிழம்), செண்பகம், தாமரை, வில்வம், செங்கழுநீர், மருக்கொழுந்து, மருதாணி, தர்பம், அருகு, நாயுருவி, விஷ்ணுக்ராந்தி, நெல்லி ஆகியவற்றின் இலை பூஜைக்கு உகந்தவை.

பூஜைக்குரிய பழங்கள் நாகப்பழம், மாதுளை, எலுமிச்சை, புளியம்பழம், கொய்யா, வாழை, நெல்லி, இலந்தை, மாம்பழம், பலாப்பழம்.

திருவிழாக் காலத்திலும், வீதி வலம் வரும் போதும், பரிவார தேவதைகளின் அலங்காரத்திலும் மற்றைய நாட்களில் உபயோகிக்கத் தகாததென்று விலக்கப்பட்ட மலர்களை உபயோகிக்கலாம்.

அபிஷேகம், ஆடை அணிவிப்பது, சந்தன அலங்காரம், நைவேத்யம் முதலிய முக்கிய வழிபாட்டுக் காலங்களில் கட்டாயமாகத் திரை போட வேண்டும். திரை போட்டிருக்கும் காலத்தில் இறை உருவைக் காணலாகாது.

குடுமியுள்ள தேங்காயைச் சமமாக உடைத்துக் குடுமியை நீக்கி விட்டு நிவேதனம் செய்ய வேண்டும்.

பெரு விரலும் மோதிர விரலும் சேர்த்துத் திருநீறு அளிக்க வேண்டும். மற்ற விரல்களைச் சேர்க்கக் கூடாது.

கோவில்களில், பூஜகர்களிடமிருந்துதான் திருநீறு போன்ற பிரசாதங்களைப் பெற வேண்டும். தானாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

பூஜையின் துவக்கத்திலும், கணபதி பூஜையின் போதும், தூபதீபம் முடியும் வரையிலும், பலிபோடும் போதும், கை மணியை அடிக்க வேண்டும்.

Friday, 4 April 2014

உமேச மூர்த்தி இன்பமயமான வாழ்வு அமைய அருள்புரிவார்.

                                                            
                                                     உமேச மூர்த்தி

முன்பொருமுறை நான்முகன் படைத்தல் தொழிலுக்கு நான்கு புதல்வர்களை தன்னுடைய தவ சக்தியால் உண்டாக்கினார். அந்த நால்வரும் படைத்தல் தொழிலை மேற்க்கொள்ளாமல் தவச்சாலையை நோக்கிச் சென்றுவிட்டனர். பின்னர் நான்முகன் விஷ்ணுவை கானச்சென்றார். அவர்தம் குறைகளைச் சொன்னார். இக் குறைகளைப் போக்குபவர் சிவபெருமான் ஒருவரே, எனவே அவரைச் சென்று பார்ப்பதே உசிதமென நான்முகன், விஷ்ணு, நான்கு புதல்வர்கள் சகிதம் வெள்ளிமலையை அடைந்தனர்.

அவர்களை நெற்றிக்கண்ணால் சிவபெருமான் நோக்க, அவர்களனைவரும் எரிந்து சாம்பலானார்கள். அப்பொழுது தனிமையில் இருந்த சிவபெருமான் தன் தோளைப்பார்க்க அவரது சக்தியே உமாதேவியாக வடிவம் கொண்டு வெளிவந்தது. உடன் உமாதேவியை தன் இடபுறமாக இருக்க செய்தார். பின்னர் எரிந்து சாம்பலானவர்களை முன் போலவே படைத்தார். அவர்கள் அனைவரும் இவர்கள் இருவரையும் வணங்கி நின்றனர். இருவரது அகமும் மகிழ்ந்ததால் அவர்கள் அனைவரும் கேட்ட வரத்தினைக் கொடுத்தார். உலகமே செழித்தது. உலகிலுள்ள அனைத்து உயிர்களையும் படைத்து, காத்து, துயர்துடைத்து அனைத்தையும் வாழவைக்கும் சக்தியை உமையவளாக இடது பாகத்தில் வீற்றிருந்தக் கோலத்தைக் கண்டவர்கள் ஆனந்தப்பட்டனர். ஆகவே சிவபெருமானது பெயர்களில் உமேச மூர்த்தியும் சேர்ந்துக் கொண்டது.

பொதுவாக சிவபெருமான் உமாதேவியோடு கூடியிருக்கும் திருக்கோலமே உமேசமூர்த்தி யானது என்றும் சொல்லலாம். இத்தகைய சிறப்பு பெற்ற உமேசமூர்த்தியை தரிசிக்க நாம் செல்ல வேண்டியத் தலம் திருஇடைமருதூர் ஆகும். கும்பகோணம் அருகே அமைந்துள்ள இத்தலத்தில் கோயில் கொண்டுள்ள உமேசமூர்த்தியை காவிரி நீரால் அபிசேகம் செய்தால் குடும்ப வாழ்வு இன்பமயமானதாக அமைய அருள்புரிவார்.

Thursday, 3 April 2014

ஐயப்பன் அவதரித்த வரலாறு வாபர் தர்கா

 
                                     
               மகிஷாசுரனின் தங்கையான அரக்கி மகிஷி. தேவலோகத்தையும் பூலோகத்தையும் ஆட்டி படைத்து கொண்டிருந்தாள், அத்துடன் தன் சகோதரன் மகிஷாசுரனின் அழிவுக்கு தேவர்களே காரணம் என கருதி அவர்களை பழிவாங்கவும் மகிஷி முடிவு செய்தாள். அதற்கான சக்தியை பெற மகிஷி பிரம்மாவை நோக்கி தவம் புரிந்தாள். பிரம்மா, இவள் முன் தோன்றி, வேண்டும் வரம் கேள் என்றார்.சிவனுக்கும், விஷ்ணுவுக்கும், பிறந்த புத்திரனால் அல்லாது வேறு யாராலும் எனக்கு மரணம் நேரிடக்கூடாது என மகிஷி வரம் கேட்டாள். கேட்ட வரம் கிடைத்தது. வரம் பெற்ற மகிஷி தேவலோகத்தில் தேவர்களையும், பூலோகத்தில் மக்களையும் கடும் கொடுமைப்படுத்தி வந்தாள்.

தேவர்கள் துயரம் தாங்காமல் பரமசிவனிடத்தில் முறையிட்டனர். விஷ்ணுவின் அம்சமான மோகினி மூலம் சைவ வைஷ்ணவ ஜோதியாக ஐயப்பன் பூலோகத்தில் அவதரித்தார். பம்பாதீரத்தில் ஒரு குழந்தையாய் ஐயன் அழும் சமயத்தில் பாண்டிய மன்னனும், பந்தளத்து அரசனுமான ராஜசேகரன், குழந்தை இல்லாத தனக்கு பகவானே அளித்ததாக எண்ணி அந்தக் குழந்தையை பந்தளம் கொண்டு வந்து ராணியிடம் கொடுத்து மகிழ்வித்தார். கழுத்தில் மணி இருந்தால் மணிகண்டன் என்றும் ஐயப்பன் என்றும் பெயர் சூட்டினார். பகவான் வருகையால் ராணியும் கருவுற்றாள்.
எல்லா லட்சணங்களுடனும் கூடிய பாலகனும் பிறந்தான். அவனுக்கு ராஜராஜன் என்று பெயர் சூட்டினர். மணிகண்டனின் வருகையால் தான் தனக்கு எல்லா நலன்களும் ஏற்படுகிறது என்பதை புரிந்து கொண்ட ராஜசேகரன், மணிகண்டனுக்கு பட்டாபிஷேகம் செய்வதற்கு ஏற்பாடு செய்தார். இதை உணர்ந்த மந்திரி, மணிகண்டன் ராஜாவானால் தனக்குள்ள செல்வாக்கும், வசதிகளும் போய்விடும் என்று எண்ணி மணிகண்டனையே ஒழிக்கப்பார்க்கிறான். ஆனால் ஒன்றும் பலிக்கவில்லை. பின் தனது சூழ்ச்சியால் புலிப்பால், கொண்டு வந்தால்தான் மகாராணிக்கு வந்துள்ள நோய் போகுமென்று அரண்மனை வைத்தியர்களைக் கொண்டுச் சொல்லச் செய்கிறான்.இது சூழ்ச்சி என்று தெரிந்தபோதிலும், மணிகண்டன் புலிப்பால் கொண்டு வர காட்டுக்குச் செல்கிறான். ஐயனின் வரவிற்காகக் காத்திருந்த தேவர்கள் பகவானை பொன்னம்பல மேட்டில் பூஜை செய்து மகிஷியினால்படும் துயரத்தைக் கூறினர். மணிகண்டன் தேவலோகம் சென்று மகிஷியை வென்று பூமிக்குத் தள்ள மகிஷி அழுதா நதிக்கரையில் விழுந்தாள்.
ஐயன் அவள்மேல் நர்த்தனமாடி, மகிஷியை உயிரிழக்க செய்தார். மகிஷி மீண்டும் சாப விமோசனம் பெற்று ஐயனை அடையும் ஆவலைத் தெரிவித்தாள். ஆனால் தான் பிரம்மச்சர்ய நிஷ்டையுள்ளவனானதால் அது சாத்தியமாகாது என்றும், தான் இருக்கும் இடத்தின் இடப்பக்கத்தில் மாளிகைப்புரத்தம்மா என்ற பெயருடன் அவர் விளங்கிவர ஐயன் அருள் செய்தார்.
மகிஷியின் கொடுமை நீங்கியதால் சந்தோஷமடைந்த தேவர்கள் மணிகண்டனை பலவிதமாக துதித்து பூஜித்தனர். பின் யாவரும் புலியாக மாறி ஐயனின் பணிகளை நிறைவேற்றுவதற்காகப் பந்தளம் சென்றனர். புலிக்கூட்டம் வருவதை கண்டு மக்கள் பீதியடைந்தனர். ஐயப்பனின் சக்தியும், பெருமையும் உணர்ந்து மந்திரியும், ராணியும் மணிகண்டனிடம் மன்னிப்பு கேட்டனர்.
மணிகண்டனும், மன்னிப்பதற்கு எதுவுமில்லை. எல்லாம் லீலைகள்படி நடந்துள்ளன. நான் பூமியில எதற்காக பிறந்தேனோ, அந்த வேலை முடிந்துவிட்டது. இனி நான் தேவலோகம் செல்கிறேன் என்றான். மன்னன் பகவானே தாங்கள் எங்களுடன் இருந்ததன் அடையாளமாக உங்களுக்கு ஒரு கோயில் கட்ட நினைக்கிறோம். அதை எங்கு கட்ட வேண்டும் என்று சொல்லுங்கள் என்றான். மணிகண்டன் ஒரு அம்பை எடுத்து எய்து, இந்த அம்பு எங்கு போய் விழுகிறதோ அங்கு கோயில் எழுப்புங்கள் என்றான். அந்த அம்பு சபரிமலையில் விழுந்தது. அங்கு 18 படிகளுடன், கிழக்கே நோக்கி தனக்கும் பக்கத்தில் மாளிகைப்புறத்தம்மனுக்கும் கோயில் கட்டும்படி கூறிவிட்டு மணிகண்டனாகிய ஐயப்பன் தேவலோகம் சென்றார்.
மணிகண்டன் கட்டளைப்படி, அகத்திய முனிவரின் ஆலோசனையுடன் மன்னர் ஊண், உறக்கமின்றி தானே மேற்பார்வை செய்து சபரிமலையில் பதினெட்டு படியோடு கூடிய அழகிய கோயிலை கட்டினார்.
ஆண்டுதோறும் லட்சோப லட்சம் மக்கள் ஜாதி, மத பேதமின்றி மாலை அணிந்து 48 நாட்கள் கடும் விரதம் அனுசரித்து சபரிமலை வந்து புனித பதினெட்டுப்படி ஏறி ஐயப்பன் அருள் பெற்று வருகின்றனர். ஆண்டுதோறும் மகர சங்கராந்தி தினத்தன்று ஐயப்பன் பக்தர்களுக்கு ஜோதி வடிவில் காட்சியளித்து அருள்பாலிக்கிறார்.

                                                        வாபர் தர்கா
                                  


     ஐயப்பனின் வாழ்வில் வாபரின் பங்கு
 
வாபர் ஒரு இஸ்லாமியர். கொள்ளைக்காரனாக இருந்தனர். ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் வழியில் அவர் தன்னுடன் வந்த மக்களுக்கு கூடாரங்கள் அமைத்துக் கொடுத்து தங்க வைத்திருந்தார். கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் கொள்ளையடித்து அந்த பொருட்களை தன்னுடன் தங்கியிருந்தவர்களுக்கு வழங்கி வந்தார். அரசர்களால் வாபரை பிடிக்கமுடியவில்லை. எனவே அவர்கள் ஐயப்பனிடமே இதுபற்றி முறையிட்டனர்.
ஒருமுறை ஐயப்பன் வாபரை காணச்சென்றார். குழந்தையாக இருந்த ஐயப்பன் வாபருக்கு எச்சரிக்கை விடுத்தார். என்னைக் காணவரும் பக்தர்களை துன்புறுத்தினால் உன்னை அழித்துவிடுவேன் என்று கூறினார். இரக்க குணமுள்ள வாபர் சிறுவனான ஐயப்பனை பார்த்து, நீ என் குழந்தை போல இருக்கிறாய். உன்னை எப்படி நான் கொல்லுவேன். என்னை நீ துன்புறுத்தாதே. போய்விடு என்றார். இதற்கெல்லாம் கலங்காத ஐயப்பன் வாபரை கொல்ல முயன்றார். உடனே வாபர் ஐயப்பனிடம் என்னை நீ கொன்றுவிட்டால் என்னை நம்பி இங்கு குடியிருக்கும் மக்களை என்ன செய்யப்போகிறாய் என்று கேட்டார்? உடனே ஐயப்பன் அவர்களுக்கு வேண்டிய பொருளைக் கொடுத்து நல்லபடியாக வாழ வைக்கிறேன் என்றார்.
அதன்படி அந்த இடத்தில் ஒரு பள்ளிவாசல் கட்டப்பட்டது. அத்துடன் எனது கோயிலுக்கு வரும் பக்தர்கள் உனது இடத்துக்கும் வருவார்கள். அவர்களை சோதித்தபின்பே நீ எனது மலைக்கு அவர்களை அனுப்பி வைக்க வேண்டும்.
இதன்படி சரியாக விரதமிருக்காதவர்கள், பிரம்மச்சாரியம் பூணாதவர்கள், இளம் பெண்கள் ஆகியோரை நீ இந்த இடத்திலேயே தடுத்து நிறுத்திவிட வேண்டும் என்று உத்தரவிட்டார்.
ஐயப்பனின் தாராள மனமறிந்த வாபர், ஐயப்பனின் சொல்படி இன்றுவரை பக்தர்களை சோதித்துக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. இந்தப் பள்ளிவாசலில் பக்தர்களுக்கு இப்போதும் திருநீறு தருகிறார்கள். அங்கு விபூதி பூசியபிறகுதான் சபரிமலைக்கு செல்வது வாடிக்கையாக இருந்து வருகிறது.